×

சரி செய்ய முடியாத திருமணத்தை 142 பிரிவின் கீழ் நேரடியாக ரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் சரி செய்ய முடியாத திருமண முறிவின் அடிப்படையில் ஒரு ஜோடியின் திருமணத்தை உச்ச நீதிமன்றத்தால் நேரடியாக ரத்து முடியும் என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. திரும்பப்பெற முடியாத திருமண முறிவு என்பது வாழ்க்கைத் துணைவர்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் ஒன்றாக வாழ முடியாது என்பதாகும். திருமணத்தை சரி செய்ய முடியாத அளவுக்கு உறவுகள் முறிவடையும் போது, அது திருமணத்தின் மீளமுடியாத முறிவு என்று அழைக்கப்படுகிறது. கணவன்-மனைவி இடையே பாசம் இல்லாதது, தம்பதியர் பிரிந்து வாழ்வது, அடிக்கடி சண்டை சச்சரவுகள் அல்லது கணவன்-மனைவி இருவரில் ஒருவர் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடுவது போன்றவைகள் இந்த திருமண முறிவுக்கு வழிவகுக்கிறது.

இந்த நிலையில் சரி செய்ய முடியாத திருமண முறிவு விவகாரத்தில் மனுதாரர்கள் சில்பா மற்றும் வருண் சீனிவாசன் என்ற இருவரது விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விரிவாக விசாரணை நடத்தி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சய் கிஷன், சஞ்சீவ் கண்ணா, ஏ.எஸ்.ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில்,‘‘இந்து திருமண சட்டம் பிரிவு 13 உட்பிரிவு ‘‘பி” யின் கீழ் குடும்ப நல நீதிமன்றங்களை நாடி கட்டாய கால இடைவெளி எதுவும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தை நாடி திருமணத்தை ரத்து செய்ய கோர முடியும். குறிப்பாக சரி செய்ய முடியாத திருமண முறிவு என்ற நிலையில் உச்ச நீதிமன்றம் தனது அரசியல் சாசன பிரிவு 142 என்ற அதிகாரத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட திருமணத்தை நேரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் படி மோசமான திருமண உறவுகளால் சுமார் 37 ஆயிரம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும், இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே உச்ச நீதிமன்றத்தின் இந்த மேற்கண்ட தீர்ப்பினால் விவாகரத்து பெறுவதற்கு இனி ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கட்டாயம் என்ற நிலை மாறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post சரி செய்ய முடியாத திருமணத்தை 142 பிரிவின் கீழ் நேரடியாக ரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி